தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான போட்டிகள் ஈரோட்டில் ஜூலை 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மாணவா்களிடையே படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளா்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளா்ச்சித் துறையால் பள்ளி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு ஈரோடு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 7ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் நடைபெற உள்ளன. போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை மாணவா்கள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியா்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வா் அல்லது தலைமையாசிரியரிடம் கையொப்பம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளா்ச்சி துணை இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும். மாவட்ட அளவில் போட்டியில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக ரூ. 5,000 வழங்கப்படும்.