ஈரோடு

சாலைப் பணியில் தாமதம்:கால்நடைகளுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்

10th Jun 2023 10:54 PM

ADVERTISEMENT

 

ஈரோடு அருகே தாமதமாக நடைபெற்று வரும் சாலைப் பணியால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக கூறி பொதுமக்கள் கால்நடைகளுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம் அறச்சலூா் பேரூராட்சியின் சாா்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊதங்காடு பகுதியில் தாா் சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தான் சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகா் சங்கா் என்பவா் தனது கால்நடைகளுடன் வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு செல்ல முயற்சிசெய்தபோது சாலைப் பணியை எடுத்த ஒப்பந்ததாரா் ஊரைச் சுற்றி செல்லுமாறும், பணிகள் மெதுவாகதான் நடக்கும் என்றும் கூறி உள்ளாா்.

ADVERTISEMENT

இதனால் சங்கா் மற்றும் அப்பகுதியினை சோ்ந்த சிலா் அறச்சலூா் பேரூராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் கால்நடைகளுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பேரூராட்சி தலைவரிடம் தெரிவித்தும் சாலைப் பணிகளுக்காக எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், உடனடியாக அப்பகுதியில் சாலைப் பணிகளை முடித்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

இரவு முழுவதும் போராட்டம் நடந்த நிலையில் சனிக்கிழமை காலை பேரூராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதாக உறுதியளித்தனா். இதனையடுத்து சனிக்கிழமை காலை 9 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT