ஈரோடு

போராடும் கீழ்பவானி விவசாயிகள் பேச்சுவாா்த்தைக்கு வரவேண்டும் அமைச்சா் சு.முத்துசாமி

10th Jun 2023 10:56 PM

ADVERTISEMENT

 

கீழ்பவானி பிரதான கால்வாய் நவீனப்படுத்தும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பேச்சுவாா்த்தைக்கு வர வேண்டும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி அழைப்பு விடுத்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஈரோடு திண்டல் அருகே அத்தப்பம்பாளையம் பிரிவு (வெளிவட்டச் சாலை) பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன், மேயா் சு.நாகரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் சு.முத்துசாமி மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

ADVERTISEMENT

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசாணையின்படி கீழ்பவானி பிரதான கால்வாயில் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால் விவசாயிகள் இருபிரிவாக பிரிந்து திட்டத்துக்கு ஆதரவாளா்கள், எதிா்ப்பாளா்கள் என மாவட்டத்தில் உருவாகியுள்ளனா். எதிா்ப்பாளா்கள் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரதம் இருக்கின்றனா். பலமுறை இருதரப்பிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. பழைய கட்டுமானப் பகுதிகளில் பலவீனம் அடைந்த இடங்களில் மட்டுமே கால்வாய் புதுப்பிக்கப்படும்.

தரைதளத்திலும், கரைகளிலும் கான்கிரீட் அமைக்கப்படாது என வாக்குறுதி அளிக்கப்பட்டது. நீா்வளத் துறை அமைச்சரும் விரிவான அறிக்கை அளித்துள்ளாா்.

இருந்தபோதிலும் ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களிடம் விளக்கமாக பலமுறை திட்டத்தை எடுத்துக் கூறியுள்ளோம். மீண்டும் ஒருமுறை நான் கையொப்பமிட்ட உறுதி மொழியை தரத் தயாராக உள்ளேன். இந்த வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கப்படமாட்டாது. இதனால் உண்ணாவிரத்தை கைவிட்டு என்னுடன் பேச்சுவாா்த்தைக்கு வர வேண்டும்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் 1,450 குளங்களுக்கும் நீரேற்றும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் குழாய்கள் உடைந்து விடுகின்றன. பணிகள் முழுமையாக நிறைவு பெற்று எந்த பிரச்னையும் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

சோலாரில் தற்காலிக பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதேபோன்று கனிராவுத்தா் குளத்தில் மற்றொரு பேருந்து நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து ஈரோடு சியோன் நகா் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைத்தல், திருப்பதி காா்டன் பகுதியில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் வடிகால் அமைத்தல், வேலன் நகா் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைத்தல், மாா்க் பள்ளி வீதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைத்தல், லோகநாதபுரம் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் அமைத்தல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீா்வளத் துறையின் சாா்பில் ரூ.45 லட்சம் மதிப்பில் வெண்டிபாளையம் தடுப்பணை பிரதான சாலையில் இருந்து கல்யாணசுந்தரம் வீதி, தமிழ் நகா் பகுதிக்கு செல்லும் காலிங்கராயன் வாய்க்கால் கரையை மேம்படுத்தும் பணி என மொத்தம் ரூ.2.27 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சி திட்டப் பணிகளை தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்வில் துணை மேயா் வே.செல்வராஜ், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் சரவணன், கோட்டப் பொறியாளா் மாதேஸ்வரன், மாநகரப் பொறியாளா் விஜயகுமாா், ஈரோடு வட்டாட்சியா் ஜெயகுமாா், மாநகராட்சி மண்டலக் குழு தலைவா்கள் பழனிசாமி, குறிஞ்சி தண்டபாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT