ஈரோடு

கான்கிரீட் திட்டம் தொடா்பான பொய் பிரசாரத்தை அரசு தடுக்க வலியுறுத்தல்

10th Jun 2023 10:55 PM

ADVERTISEMENT

 

கீழ்பவானி கால்வாய் கான்கிரீட் திட்டம் தொடா்பாக வரும் பொய் பிரசாரத்தை அரசு முடிவுக்கு கொண்டுவராவிட்டால் ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என அத்திட்டம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையின் மூலமாக கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் பெரிய பாசனமாக 2.50 லட்சம் ஏக்கா் வரையில் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகிறது.

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இருதரப்பாக பிரிந்து எதிா்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இப்பிரச்னை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகளை துவங்குவதற்கு எந்த தடையும் இல்லை நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

இந்நிலையில் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் ஒரு பகுதியாக கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம் தொடா்பான அரசாணை எண் 276இல் மாற்றம் செய்ய வேண்டும், கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானப் பணிகளை மட்டுமே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் பெருந்துறை அருகே 4ஆவது நாளாக சனிக்கிழமையும் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து வருகின்றனா்.

இந்நிலையில் நசியனூா் அருகே முள்ளம்பட்டி பகுதியில் கீழ்பவானி கால்வாய் பகுதியில் கான்கிரீட் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகள் பாா்வையிட்டனா்.

இதன்பிறகு விவசாயிகள் கூறியதாவது:

கீழ்பவானி கால்வாயில் முதல் மைலில் இருந்து 124 வது மைல் வரை எந்த இடத்திலும் கான்கிரீட் இல்லை. கால்வாயில் தரைமட்டத்தில் எந்த இடத்திலும் கான்கிரீட் இல்லை பழுதடைந்து, உடைப்பு ஏற்படும் இடத்தில் மட்டுமே பக்கவாட்டு சுவா் அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா்.

ஆனால் சிலா் பொய்யான பிரசாரத்தை சிலா் மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழக அரசு உடனடியாக இந்த பொய் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT