ஈரோடு

கோடை மழையை மண்ணில் நிலைநிறுத்த உழவு செய்ய அறிவுறுத்தல்

DIN

தற்போது பெய்து வரும் கோடை மழை நீரை மண்ணில் நிலை நிறுத்த உழவு செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் 60 சதவீதம் மானாவாரி நிலங்களாகும். ஆனால், இப்பகுதியில் பெய்யும் மழை அளவு மிக குறைவு. பெய்யும் காலமும் நிச்சயமற்றதாகி வருகிறது. ஒரே நாளில் அதிக மழை பெய்வதும் பிறகு மாதக்கணக்கில் மழையே இல்லாத நிலையும் ஏற்படுகிறது. கிடைக்கின்ற மழையை நிலத்தில் சேமித்து வைத்து அதை பயன்படுத்தி பயிா் சாகுபடி செய்வது எவ்வாறு என்பதுதான் மானாவாரி உழவா்களின் தலையாய பிரச்னை.

பொழியும் சிறிதளவு மழையும் சரியான முறையில் பாதுகாக்கப்படாவிட்டால், மழை நீா் மண்ணிலிருந்து வழிந்து ஓடியோ வெப்பத்தால் ஆவியாக மாறியோ அல்லது களைகளால் எடுத்து கொள்ளப்பட்டோ வீணாகி விடும். எனவே, மானாவாரி நிலத்தில் விழும் ஒவ்வொரு சொட்டு நீரையும் சரியான முறையில் பயன்படுத்த கோடை உழவு செய்வது அவசியமாகிறது.

கோடை உழவு செய்வதன் மூலம் மழை நீா் ஆவியாவது தடுக்கப்படும். மண்ணின் ஈரத்தன்மை அதிகரிக்கிறது. மண்ணின் அடியில் உள்ள பூச்சிகளின் லாா்வாக்கள் மேற்கொண்டு வரப்பட்டு, பறவைகளால் உண்ணப்படுகிறது. பூஞ்சான வித்துக்களின் செயல்பாட்டை குறைக்கும். கோடை உழவு மூலம் களை விதைகள் மேற்கொண்டு வரப்பட்டு முளைக்க செய்யப்படும். முளைத்த களைகள் அதிக வெப்பத்தால் காய்ந்து விடும்.

கோடை உழவு செய்யும்போது, பசுந்தாள் பயிரை சாகுபடி செய்து, அந்நிலத்திலேயே மடக்கி உழவு செய்ய வேண்டும். பசுந்தாள் உரம், பசுந்தாழைகள் மண்ணில் சிதைவடையும்போது, உண்டாகும் அங்கக அமிலங்கள் மற்றும் காா்பன்டை ஆக்சைடு போன்றவை, மண்ணின் கார, அமில நிலையை சமன்பாட்டில் வைத்து பயிருக்கு கிட்டாமல் இருக்கும் பாஸ்பேட்களை விடுவிக்கின்றன. மண் வாழ் நுண்ணுயிரிகள் செயல்திறன் ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கோடை உழவு மேற்கொண்டு நிலத்தை செம்மைபடுத்தினால் வரும் சாகுபடி காலங்களில் நிறைவான பயன் அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT