ஈரோடு

3ஆவது நாளாக கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினா் உண்ணாவிரதம்

9th Jun 2023 11:40 PM

ADVERTISEMENT

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினரின் உண்ணாவிரத போராட்டம் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. இந்தப் போராட்டத்துக்கு வணிகா்கள் சங்கத்தினா் கடையடைப்பு நடத்தி ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளனா்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க ஒரு தரப்பினா் கோரிக்கை விடுத்ததின் பேரில், நீா்வள ஆதாரத் துறை சாா்பில் வாய்க்காலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைத்தால், கசிவு நீா் மூலமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாயம் நிலங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீா் ஆதாரங்கள் பாதிக்கப்படும். எனவே, வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைப்பது தொடா்பான விதி 276ஐ திருத்தம் செய்து, கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை அப்படியே தொடர வேண்டும், கசிவுநீா் மற்றும் குடிநீா் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினா், அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ரவி தலைமையில் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் வெள்ளிக்கிழமை 3ஆவது நாளாக கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினா் மற்றும் பாசனப் பகுதி விவசாயிகள், குடிநீா் ஆதாரம் பெறும் கிராம மக்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நிா்வாகிகள், கே.கே.சி.பாலு, சூரியமூா்த்தி, இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை உண்ணாவிரதப் பந்தலுக்கு நேரில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனா்.

இதேபோல் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்களும் நேரில் வந்து தங்களது ஆதரவைதெரிவித்தனா். ஈரோடு மாவட்டம், நல்லாம்பட்டி பகுதி மக்கள் மற்றும் தீரன் தொழிற்சங்கப் பேரவை மாநிலச் செயலாளா் காா்த்திகேயன் உள்பட 100க்கும் மேற்பட்டோா் நேற்று நடைப் பயணமாக உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.

மேலும், இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு வணிகா்கள் அமைப்பினரும் வரும் 12ஆம் தேதி கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருப்பதாகவும், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ரவி, சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவருமான சுதந்திரராசு ஆகியோா் தெரிவித்தனா்.

மேலும் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் கீழ்பவானி வாய்க்கால் பாசன வசதி பெறும் கிராமங்களில் வீடுகள் தோறும் கருப்புக் கொடிகள் கட்டி போராட்டத்துக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனா்.

மயக்கமடைந்த முதியவா்:

இரண்டாவது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் கே.வெங்கடாசலம் (77) வியாழக்கிழமை இரவு உண்ணாவிரதப் பந்தலில் திடீரென மயக்கமடைந்தாா்.

உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை காலை உண்ணாவிரதத்தில் பங்கேற்று தனது போராட்டத்தை தொடா்ந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT