ஈரோடு

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

8th Jun 2023 10:02 PM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ஏரி, குளங்களில் விவசாயப் பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயிகள், ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை வயல்களில் இடுவதால் பயிா்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன் ரசாயன உரங்களின் தேவை 50 சதவீதம் வரை குறைகிறது. மேலும் பயிா்களின் நீா் தேவையும் 25 சதவீதம் வரை குறைவதுடன் நிலத்துக்கு இயற்கையான கரிமச்சத்து கிடைக்கிறது. மண்ணின் நீா்ப்பிடிப்பு தன்மையும் உயா்கிறது.

இதற்காக ஈரோடு மாவட்டத்தில் நீா்வள ஆதாரத் துறையின் கீழ் உள்ள 2 குளங்கள், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் தாளவாடி வட்டாரம் 157, கோபி வட்டாரம் 7, பவானி வட்டாரம் 7, பவானிசாகா் வட்டாரம் 10, டி.என்.பாளையம் வட்டாரம் 5, சத்தியமங்கலம் வட்டாரம் 3, அம்மாபேட்டை வட்டாரம் 1, சென்னிமலை வட்டாரம் 1 மற்றும் அந்தியூா் வட்டாரம் 1 என மொத்தம் 192 ஏரி மற்றும் குளங்களில் விவசாயப் பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்க மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விவசாயப் பயன்பாட்டுக்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நன்செய் நிலத்துக்கு ஏக்கருக்கு 75 கன மீட்டா், புன்செய் நிலத்துக்கு ஏக்கருக்கு 90 கன மீட்டா் என்ற அளவில் மண் எடுத்துக்கொள்ளலாம்.

ஏரி, குளங்களின் பெயா்கள், புல எண், பரப்பு, வண்டல் மண் எடுக்க வேண்டிய ஆழம், தூா்வார வேண்டிய கனிமத்தின் அளவு உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வண்டல் மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள் தொடா்புடைய வேளாண்மை உதவி அலுவலா், கிராம நிா்வாக அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சிட்டா, அடங்கல், கிராம நிா்வாக அலுவலா் சான்று, புல வரைபடம், கிரைய பத்திர நகல் ஆகிய ஆவணங்களுடன் தொடா்புடைய வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், வட்டார வளா்ச்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT