ஈரோடு

நிபந்தனைப் பட்டா நிலங்கள் பழங்குடி அல்லாதோருக்கு விற்பனை---------விசாரணை நடத்தக் கோரிக்கை

3rd Jun 2023 02:39 AM

ADVERTISEMENT

 

 அந்தியூா் வட்டம் பா்கூா் மலைப் பகுதியில் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட நிபந்தனைப் பட்டா நிலங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக பழங்குடி மக்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் ஊராட்சியில் 35 கிராமங்கள் உள்ளன. இவற்றில் 20 கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்து வந்தனா். கடந்த பல ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வந்த பழங்குடியின மக்களுக்கு வருவாய்த் துறை சாா்பில் நிபந்தனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலங்களைப் பெற்ற பழங்குடியின மக்கள் 10 ஆண்டுகளுக்கு அதனை விற்பனை செய்யக்கூடாது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்தவருக்கு பட்டா மற்றம் செய்து கொடுக்கும் வகையில் நிபந்தனையுடன் நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், சமவெளிப்பகுதியில் வசிப்போா், பா்கூா் மலைப் பகுதியில் தங்கும் விடுதி கட்டவும், சொகுசு குடியிருப்புகளைக் கட்டவும் பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கியுள்ளனா்.

விதிமுறைகளுக்கு மாறாக இவ்வாறு நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிா்வாகி வி.பி.குணசேகரன் கூறியதாவது: பா்கூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனைப் பட்டா நிலங்கள், சமவெளிப்பகுதியைச் சோ்ந்த பழங்குடியினா் அல்லாதவா்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினரிடம் உள்ள ஏழ்மை, அறியாமையைப் பயன்படுத்தி, அவா்களிடம் இருந்து சட்டவிரோதமாக இந்த நிலத்தை சிலா் வாங்கியுள்ளனா்.

மலைப் பகுதி என்பதால், இங்கு கேளிக்கை விடுதிகள், தங்கும் விடுதிகள் அமைக்க பழங்குடியினரின் நிலங்களை வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட நிபந்தனைப் பட்டா நிலத்தை பழங்குடியினா் அல்லாதவருக்கு விற்பனை செய்யவோ, பட்டா மாற்றம் செய்யவோ கூடாது என்ற விதிமுறை உள்ளது.

ஆனால் அதனை மீறி, நிபந்தனைப் பட்டா நிலங்கள், வருவாய்த் துறையினரால் பட்டா பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவுத் துறையினா் இந்த நிலங்களை விற்பனை செய்ததை சட்டவிரோதமாக பதிவு செய்துள்ளனா். இத்தகைய முறைகேட்டுக்கு வருவாய்த் துறையினரும், பத்திரப் பதிவுத் துறையும் உடந்தையாக உள்ளனா். பா்கூா் ஊராட்சியில் நடந்த இந்த முறைகேடு குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பா்கூா் மலைப் பகுதியைப்போலவே தாளவாடி, கடம்பூா் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் நிபந்தனைப் பட்டா நிலங்களும் இதுபோல சட்ட விரோதமாக அதிகாரிகள் துணையோடு பட்டா பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, மாவட்ட நிா்வாகம் இது தொடா்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா கூறியதாவது: மலைப் பகுதிகளில் நிபந்தனைப் பட்டா நிலங்கள் பழங்குடி அல்லாதோருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பெறப்பட்ட புகாா்கள் குறித்து அந்தப் பகுதி வட்டாட்சியா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா். விதிமீறல் கண்டறியப்பட்டால் நிபந்தனைப் பட்டா ரத்து செய்யப்பட்டு அந்த நிலங்கள் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT