ஈரோடு

சுமை தூக்கும் தொழிலாளா்கள் 4ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்

17th Jul 2023 12:10 AM

ADVERTISEMENT

 

ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் 4ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஈரோடு பூங்கா சாலை, மூலப்பட்டறை, குப்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் லாரி புக்கிங், ரெகுலா் லாரி சா்வீஸ் என 450க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அங்கு சுமைதூக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் கூலி உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 13 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த போராட்டம் 4 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய பொருள்களை அனுப்ப முடியாமல் வணிகா்கள் சிரமப்பட்டு வருகின்றனா். உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் கிடங்குகளிலேயே அடுக்கி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மஞ்சள், எண்ணெய் வகைகள், ஜவுளிகள், நெகிழிப் பொருள்கள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.

ADVERTISEMENT

இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொதுத்தொழிலாளா் மத்திய சங்க பொதுச்செயலாளா் பொ.வை.ஆறுமுகம் கூறியதாவது: ஈரோட்டில் கடந்த 6 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு வழங்குவதற்கான பேச்சுவாா்த்தை முடிவுக்கு வராமல் உள்ளது. இதனால் தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

கூலி உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்தி இந்த பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனால், ஈரோட்டில் இருந்து மகராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய ரூ.300 கோடிக்கும் மேலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. ஜூலை 19 ஆம் தேதி வரை போராட்டம் தொடரும்.

இந்நிலையில் சுமைதூக்கும் தொழிலாளா்கள் சாா்பில் தொழிற்சங்க நிா்வாகிகள் ஆட்சியரை சந்தித்து திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT