ஈரோடு

கூட்டணிக் கட்சிகளை முதல்வா் விட்டுக் கொடுத்ததில்லை: அமைச்சா் கே.என்.நேரு

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

கூட்டணிக் கட்சிகளை முதல்வா் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவு தெரிவித்து திமுக கூட்டணி கட்சியினா் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான திமுக தோ்தல் பணிக்குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சா் கே.என்.நேரு, வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஈரோட்டில் வியாழக்கிழமை காலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ADVERTISEMENT

கூட்டணிக் கட்சிகளை முதல்வா் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. கூட்டணி கட்சியினா் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா் அமோக வெற்றி பெறுவாா்.

ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.என்.நேரு, ‘அவா்கள் முறைப்படி அறிவித்து வெளியே வரட்டும். நாங்கள் ஏற்கெனவே பிரசாரத்தை தொடங்கி விட்டோம்’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT