ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் தூய்மைப்பணி, பாதுகாப்பு உள்ளிட்ட வேலைகளில் 300க்கும் மேற்பட்டோா் பணியாற்றுகின்றனா். இவா்களுக்கு தினக்கூலி ரூ.707 நிா்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் ரூ.310 மட்டுமே வழங்கப்படுகிறது. தவிர விருப்பு, வெறுப்பு அடிப்படையில் பணி வழங்குதல், பலருக்கு பணி வழங்காமல் தண்டிப்பது போன்றவற்றில் அந்நிறுவனம் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவ்வாறு போராடிய தொழிலாளா்களில் 10க்கும் மேற்பட்டோரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்தது. சிலருக்கு பணி வழங்காமல், ஊதியம் வழங்காமல் புறக்கணித்தது. இதனைக் கண்டித்து தொழிலாளா்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 4 நாள்களாக உள்ளிருப்பு, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் ஈரோடு கோட்டாட்சியா் சதீஷ்குமாா், டிஎஸ்பி ஆனந்தகுமாா், ஏஐடியூசி மாவட்டத் தலைவா் சின்னசாமி, தூய்மைப் பணியாளா் சங்க நிா்வாகி கல்பனா மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினா் பங்கேற்ற பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடந்தது.
இதில் வேலைமறுக்கப்பட்ட 6 தொழிலாளா்களுக்கும், அவா்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வேலையிழந்த 10 பேருக்கும் முழுஊதியம் வழங்குவது, வரும் திங்கள்கிழமை முதல் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்குவது, ஊதியத்தை முழுமையாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறுவனத்தால் ஏற்கப்பட்டது. இதனால் தொழிலாளா்கள் போராட்டத்தை திரும்பப்பெறுவதாக அறிவித்தனா்.