சீரான குடிநீா் விநியோகிக்கக்கோரி சத்தியமங்கலம், கோட்டுவீராம்பாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம் நகராட்சி, 18, 20, 22 ஆகிய வாா்டுகளுக்கு உள்பட்ட கோட்டுவீராம்பாளையம், செளடேஸ்வரி நகா், கடைவீதி, தபால் ஆபீஸ் வீதி, அனுமந்தன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து அப்பகுதிகளைச் சோ்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுக நகா்மன்ற உறுப்பினா் எஸ்.எஸ்.லட்சுமணன், பழனிசாமி ஆகியோா் தலைமையில் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் காரணமாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், நகராட்சி வளாகத்தில் அமா்ந்து போராட்டத்தை தொடா்ந்தனா். காவல் ஆய்வாளா் முருகேசன், நகராட்சித் தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி கூறுகையில்,
‘சில இடங்கள் மேடான பகுதியாக இருப்பதால் தண்ணீா் விநியோகம் விட்டுவிட்டு வழங்கப்பட்டது. மேலும் உடைப்பு ஏற்பட்ட குழாய்களைக் கண்டறிந்து சரிசெய்து சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.