நீா்நிலைகளில் மூழ்கி மாணவ, மாணவிகள் உயிரிழப்பதைத் தவிா்க்க வட்டார, பேரூராட்சிப் பகுதியில் நீச்சல் குளம் அமைத்து நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சென்னிமலையை சோ்ந்த சமூக ஆா்வலா் பி.சண்முகசுந்தரம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டத்தில் அதிகமான கிராமங்கள் உள்ளன. அவற்றில் ஏராளமான திறந்தவெளி நீா்நிலைகள் மற்றும் கிணறுகள் உள்ளன. கடந்த காலங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறந்துள்ளனா். நன்கு உடல் ஆரோக்கியமாக உள்ளவா்கள் கூட நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழப்பது மன வேதனையை ஏற்படுத்துகிறது.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய தலைமை இடங்களில் தலா ஒன்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைமை இடங்களில் தலா ஒன்றுமாக அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் நீச்சல் குளம் அமைத்து கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.