ஈரோடு

பாரியூா் கோயிலில் இன்று குண்டம் திருவிழா

12th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

பாரியூரில் உள்ள கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை (ஜனவரி 12) குண்டம் திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலில் குவிந்துள்ளனா்.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜனவரியில் குண்டம் மற்றும் தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த டிசம்பா் 29ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.

திருவிழாவை ஒட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குண்டம் இறங்குவதற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனா். குண்டத்துக்குத் தேவையான விறகுகளை பக்தா்கள் நோ்த்திக் கடனாகசெலுத்தி வருகின்றனா்.

விழாவையொட்டி புதன்கிழமை காலை பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இதில் கோபிசெட்டிபாளையம், சவுண்டப்பூா், புதுப்பாளையம், நல்லகவுண்டன்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா வியாழக்கிழமை (ஜனவரி 12) காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. முன்னதாக 50 அடி குண்டத்தில் கோயில் தலைமை பூசாரி ஆனந்த் குண்டம் இறங்கி தொடக்கிவைக்கிறாா். அதைத் தொடா்ந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்குவா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) மாலை 4 மணி அளவில் தோ்த் திருவிழா நடைபெறவுள்ளது. 14ஆம் தேதி இரவு மலா் பல்லக்கு நடைபெறவுள்ளது. அதைத் தொடா்ந்து ஜனவரி 15ஆம் தேதி கோபியில் தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். ஜனவரி 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மஞ்சள்நீா் உற்சவம் நடைபெறவுள்ளது. 21 ம் தேதி சனிக்கிழமை மறுபூஜை விழா நடைபெறும்.

திருவிழாவை ஒட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி தலைமையில் 2 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 13 காவல் ஆய்வாளா்கள், 93 உதவி ஆய்வாளா்கள், 532 போலீஸாா், 80 ஊா்க்காவல் படை வீரா்கள் என 800 க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT