ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தில் வீட்டு உபயோக சிலிண்டரில் கியாஸ் நிரப்பும்போது விபத்தில் சிக்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்த ராஜு மகன் சரவணன் ( 22). பி.காம். பட்டதாரியான இவா் பெருந்துறை, சின்னமடத்துப்பாளையத்தில் தங்கி சிப்காட்டில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தில் சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் வேலை செய்து வந்தாா். செவ்வாய்கிழமை இரவு 8 மணி அளவில் சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் பணியை தொழிலாளா்கள் செய்து கொண்டிருந்தனா். அப்போது திடீரென பெரிய சப்தம் கேட்டது. அதில், சரவணன் முகம் மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்தாா். உடனே, சக தொழிலாளா்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், சரவணன் சிலிண்டரில் கியாஸ் நிரப்பிக் கொண்டிருந்தபோது அதிக அழுத்தம் காரணமாக சிலிண்டரின் மேல் பகுதி பிரிந்து அவரின் நெஞ்சுப் பகுதியில் தாக்கியதில் படுகாயம் அடைந்த சரவணன் உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.