ஈரோடு

பல ஆண்டுகளாக தீராத பிரச்னைகள், கட்டண உயா்வு: ஈரோடு மாநகர மக்கள் தவிப்பு

1st Jan 2023 04:08 AM

ADVERTISEMENT

 

 ஈரோடு நகரில் மக்களைப் பாதிக்கும் புதை சாக்கடை கட்டணம், குப்பை வரி உயா்வு உள்ளிட்டவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, நீண்ட காலமாக நிலவி வரும் மக்கள் பிரச்னைகளுக்குத் தீா்வு காண மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு கடந்த 2007ஆம் ஆண்டு மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டது. அதற்கு முன்னதாக 1871இல் இருந்து நகராட்சியாக செயல்பட்டு வந்தது. தற்போது 60 வாா்டுகள் கொண்டு ஈரோடு மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சியில் 10 ஆண்டுகளாக நிறைவுபெறாத புதை சாக்கடை திட்டம், 3 ஆண்டுகளாக நீடித்துவரும் ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள், 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத சாலை மேம்பாட்டு பணி, பொலிவுறு நகரத் திட்டப் பணிகள், 25 ஆண்டுகளாக நீடிக்கும் சாயக்கழிவு பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படவில்லை.

ADVERTISEMENT

புதை சாக்கடை கட்டண நெருக்கடி: ஈரோடு மாநகராட்சியில் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதை சாக்கடை திட்டம் தற்போது வரை முழுமையாக முடிவுக்கு வராத நிலை தொடா்கிறது. இதனிடையே புதை சாக்கடை இணைப்புக்கான வைப்புத் தொகை, மாதாந்திர கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

அதன்படி 500 சதுர அடிக்குள் கட்டட பரப்பளவு உள்ள வீட்டு இணைப்புக்கு வைப்புத் தொகை ரூ.7,500 (பழைய கட்டணம் ரூ.5,000), மாதாந்திர கட்டணம் ரூ.100 ஆகவும் (முன்பு இருந்த கட்டணம் ரூ.70) உயா்த்தப்பட்டுள்ளது. 501 முதல் 1,200 சதுர அடி வரையிலான இணைப்புக்கு வைப்புத் தொகை ரூ.10,000 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ.100இல் இருந்து ரூ.140 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

1,201 முதல் 2,400 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு வைப்புத் தொகை ரூ.12,500, மாதாந்திரக் கட்டணம் ரூ.180 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. 2,401 சதுர அடிக்கு மேல் வைப்பு கட்டணம் ரூ.15,000, மாதாந்திரக் கட்டணம் ரூ.220 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

500 சதுர அடிக்குள்ளான தொழிற்சாலைகள் மற்றும் வணிக உபயோகத்துக்கான கட்டடங்களுக்கு வைப்புத் தொகை ரூ.15,000, மாதாந்திர கட்டணம் ரூ.300 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. 501 சதுர அடி முதல் 1,200 சதுர அடி வரை வைப்புத் தொகை ரூ.20,000, மாதாந்திரக் கட்டணம் ரூ.420 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

1,201 முதல், 2,400 சதுர அடி வரையில் வைப்புத் தொகை ரூ.25 ஆயிரமும், மாதாந்திர கட்டணமாக ரூ.540, 2,400 சதுர அடிக்கு மேல் வைப்புத்தொகையாக ரூ.30,000, மாதாந்திர கட்டணமாக ரூ.660 செலுத்த வேண்டும் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாநகராட்சியில் புதை சாக்கடைப் பணிகள் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், பணிகள் முடிந்த பகுதிகளில், இந்த கட்டண உயா்வு அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டணத்தைச் செலுத்த வேண்டுமென, பொதுமக்களுக்கு மாநகராட்சி சாா்பில் 2 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கை அளிக்கப்பட்டு, கட்டணத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கட்டண உயா்வால் மக்கள் தவிப்பு: இது குறித்து ஈரோடு வஉசி பூங்கா சாலை பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு கூறியதாவது: மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட புதை சாக்கடைப் பணிகள் தரமாக நடைபெறவில்லை. பல வீடுகள், தொழிற்சாலைகளில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இது தொடா்பாக புகாா் செய்தால் மாநகராட்சி நிா்வாகம் கண்டுகொள்வதில்லை. நகரின் பல இடங்களில், அடிக்கடி புதை சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு சாலையெங்கும் கழிவுநீா் ஓடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் 500 சதுர அடிக்கு உள்பட்ட வீடுகளுக்கு கூட கட்டண உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது அதிா்ச்சியளிக்கிறது.

மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் குறிப்பிட்ட கால அளவு நிா்ணயித்து நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT