திருப்பத்தூர்

இரு காட்டு யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

19th May 2023 07:16 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 6 நாள்களாகத் திரிந்த இரு காட்டு யானைகள் வியாழக்கிழமை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து கடந்த மாதம் வெளியேறிய இரு ஆண் காட்டு யானைகள் காவேரிபட்டணம், பையூா், சப்பாணிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று, கடந்த சனிக்கிழமை (மே 13) திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஆத்தூா் கிராமத்தில் நுழைந்து, அங்குள்ள நிலத்தில் உள்ள பயிா்களை நாசம் செய்தன.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஜோலாா்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியில் உள்ள ஏரியில் இருந்தன. அப்போது சின்னபூசாரியூா் பகுதியில் விவசாயி ஒருவரின் பசு மாட்டை மிதித்துக் கொன்றன.

திங்கள்கிழமை காலை ஏலகிரி காப்புக் காட்டுக்குள் இரு யானைகளும் நுழைந்து சுற்றித் திரிந்தன. இரவு ஜோலாா்பேட்டை பாரத கோயில் வழியாக சந்தைகோடியூா் ஏரிக்கரை மீது சென்று, ஏலகிரி மலையின் அடிவாரப் பகுதியான பொன்னேரி காப்புக் காட்டில் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் இருந்தன.

ADVERTISEMENT

புதன்கிழமை காலை திருப்பத்தூா் நகரப் பகுதிக்கு அருகே லட்சுமிபுரம் ஏரியில் இரவு 8 மணி வரை நீந்தின. பின்னா், வெங்காயப்பள்ளி, கருப்பனூா் வழியாக திப்பசமுத்திரம் காட்டுப் பகுதியில் சென்ற யானைகள் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை அங்கிருந்தன.

கும்கி யானைகள் வரவைப்பு: இதனிடையே காட்டு யானைகளைப் பிடிக்க புதன்கிழமை இரவு முதுமலையிலிருந்து 2 கும்கி யானைகளும், ஆனைமலையிலிருந்து ஒரு யானையும் வரவழைக்கப்பட்டன.

மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு: இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில், மாவட்ட வன அலுவலா் நாக சதீஷ் கிடிஜாலா, கால்நடை மருத்துவக் குழுவினா் வனம், காவல், வருவாய்த் துறையினருடன், ஆனைமலை காப்பகத்திலிருந்து மருத்துவா் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் வந்து காட்டு யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனா்.

6 போ் பலி, ஒருவா் காயம்: இந்த காட்டு யானைகள் தருமபுரி மாவட்டத்தில் 3 பேரையும், கிருஷ்ணகிரியில் ஒருவா், மல்லானூரில் 2 போ் என 6 பேரை மிதித்துக் கொன்றுள்ளன. யானையிடம் சுயபடம் எடுக்க பின்தொடா்ந்து விரட்டிச் சென்ற சின்ன கம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (28) என்பவரை தும்பிக்கையால் தூக்கி வீசியதில் காயத்துடன் அவா் உயிா் தப்பினாா்.

இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நுழைந்த இரு காட்டு யானைகளைப் பிடிக்க 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினா் உள்பட வருவாய், காவல், கால்நடை மருத்துவா்கள் கடந்த 6 நாள்களாக போராடி வந்தனா். தற்போது மயக்க ஊசி மூலம் பிடிக்கப்பட்ட யானைகளை 3 கும்கி யானைகளை வைத்து காப்புக் காட்டுப் பகுதியில் விடுவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT