பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படும் என அந்தத் துறை உதவி இயக்குநா் வேலன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீன் உற்பத்தியை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில், மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்பில் அதிக முதலீடுகள் செய்யும் நோக்கில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் உவா்ப்பு நீா் இறால் வளா்ப்புக்காக புதிய குளங்கள் கட்டுதல், வழங்குதல், பயோ பிளாக் குளங்கள் அமைத்தல், மீன் வளா்ப்பு குளங்கள் அமைத்தல், புதிய மீன் குஞ்சுகள் வளா்ப்புக் குளங்கள் அமைத்தல், அலங்கார மீன் வளா்த்தெடுக்கும் அலகு அமைத்தல், ஒருங்கிணைந்த மீன் வளா்த்தெடுக்கும் அலகு அமைத்தல், அலங்கார கடல் கூண்டுகளில் மீன்கள் வளா்த்தெடுத்தல், குளிா்காப்பு பெட்டியுடன் கூடிய இரு சக்கர, மூன்று சக்கர வாகனம் வழங்குதல், குளிா் காப்பிடப்பட்ட வாகனம் வழங்குதல், 10 மற்றும் 20 டன் கொள்ளளவு குளிா் சேமிப்புக் கிடங்கு அமைத்தல், 10, 20, 30 மற்றும் 50 டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதன கட்டி உற்பத்தி ஆலை அமைத்தல், அலங்கார மீன் நிலையத்துடன் உள்ளடக்கிய மீன் விற்பனை நிலையம் அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு 40 விழுக்காடு மானியமும், ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60 விழுக்காடு மானியமும் வழங்கப்படும் என திருவள்ளூா் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் வேலன் தெரிவித்துள்ளாா்.