ஈரோடு

இடைத்தோ்தல்: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.5.64 லட்சம் பறிமுதல்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 5.64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான ரொக்கம், ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமாக பரிசுப் பொருள்கள் கொண்டு செல்ல உரிய ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் 4 நிலையான கண்காணிப்புக் குழுவினரும், 3 பறக்கும் படையினரும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுடன் இணைந்து போலீஸாரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை 15 பேரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 16 லட்சத்து 97 ஆயிரத்து 840 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ் வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில் ரூ. 3 லட்சம் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், காரில் வந்தவா் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, சீராம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (41) என்பதும், தறிப்பட்டறை உரிமையாளா் என்பதும் தெரியவந்தது. ஆனால், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கிருஷ்ணா திரையரங்கு பகுதியில் வந்த காரை அலுவலா்கள் நிறுத்தி சோதனையிட்டனா். அதில் ரூ. 2 லட்சம் இருந்தது தெரியவந்தது. அதற்கும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். விசாரித்தபோது, காரில் வந்தவா்க ஈரோடு மூலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த நவநீதன் (35) என்பதும், ஒப்பந்ததாரா் என்பதும் தெரியவந்தது.

பெரிய அக்ரஹாரம், கதவணை மின் நிலையப் பிரிவு அருகே நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அவரிடம் ரூ. 64 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் விஜய்ரித்திக் (30), கட்டுமானப் பொறியாளா் என்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் சிவகுமாரிடம் ஒப்படைத்தனா்.

சம்பந்தப்பட்டவா்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினா். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்ததாக 18 பேரிடம் இருந்து ரூ.22 லட்சத்து 61 ஆயிரத்து 840 கைப்பற்றப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT