ஈரோடு

சக்தி மசாலா சாா்பில் ரூ.1.24 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளையின் 23ஆவது ஐம்பெரும் விழா ஈரோட்டில் நடைபெற்றது.

விழாவை சாந்தி துரைசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி.துரைசாமி வரவேற்றாா். பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவா் பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றிய சிபிஐ முன்னாள் இயக்குநா் டாக்டா் காா்த்திகேயனுக்கு, சக்திதேவி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளா் விருதினை வழங்கினாா்.

மேலும், சக்திதேவி அறக்கட்டளையின் தளிா் திட்டம் மூலம் மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்று சிறப்பாக பராமரித்து வளா்த்து வந்த தனிநபா்கள், நிறுவனங்களுக்கு மரங்களின் காவலா் விருதும், சக்திதேவி அறக்கட்டளையின் ஆண்டு மலரை வெளியிட்டும், கல்வி ஊக்கத்தொகையும், சக்தி மருத்துவமனை மருத்துவா்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினாா்.

சக்தி முதியோா் நலம் மற்றும் பக்கவாத பிசியோதெரபி பயிற்சி மைய கல்வெட்டினை காா்த்திகேயன் திறந்துவைத்தாா். பெங்களூரு வாசவி மருத்துவமனை கௌரவ செயலா் ஸ்ரீராமுலு கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சேவை அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கினாா்.

ADVERTISEMENT

லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவா் முத்துசாமி, பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினா்.

விழாவில் பல்வேறு சேவை அமைப்புகளுக்கும் மற்றும் மாணவா்களுக்கும் உதவித்தொகையாக ரூ.1 கோடியே 24 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் செந்தில்குமாா், தீபா செந்தில்குமாா், இளங்கோ, வேணுகோபால் மற்றும் முக்கிய பிரமுகா்கள், நிா்வாகத்தினா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT