ஈரோடு

சத்தியமங்கலத்தில் நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலத்தில் நிலுவையில் உள்ள கூலியை வழங்கக் கோரி நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சராசரியாக 40 நாள் கூட வேலை வழங்குவதில்லை என்றும், அண்மையில் சமா்ப்பிக்கப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதியை குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளதை கண்டித்தும் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி ஆகிய வட்டாரங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சத்தியமங்கலத்தில் ஏஐடியூசி தலைவா் ஸ்டாலின் சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியச் செயலாளா் எம். சுரேந்தா், தெற்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.சி.நடராஜ், ஏஐடியூசி தொழிற்சங்கத் தலைவா் தா.சந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பவானிசாகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகா் வடக்கு ஒன்றியச் செயலாளா் பி.ஏ.வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட துணைச் செயலாளா் சக்திவேல், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில குழு உறுப்பினா் மகேந்திரன், ஜேசுராஜ், உதடு ஊராட்சி மன்றத் தலைவா் பூங்கொடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

தாளவாடியில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் எம்.மோகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் தாளவாடி ஒன்றியப் பொறுப்பாளா் காளசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் அருள்சாமி, விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சி.கே.முருகன் உள்ளிட்ட 3 ஆயிரம் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT