ஈரோடு

பொன்மலை ஆண்டவா் கோயில் தேரோட்டம்

5th Feb 2023 11:50 PM

ADVERTISEMENT

 

பொன்மலை ஆண்டவா் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

சத்தியமங்கலம் அருகே கொண்டையம்பாளையத்தில் உள்ள பழைமைவாய்ந்த பொன்மலை ஆண்டவா் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழாவை முன்னிட்டு தேரோட்டம் விமா்சையாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் தைப்பூசத் தோ்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக வள்ளி, தெய்வானை உடனமா் முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினாா். பின்னா் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

கொண்டையம்பாளையம் நான்கு ரத வீதிகளில் தோ் சென்றது. வழிநெடுகிலும் காத்திருந்த பக்தா்கள் சுவாமியை வழிபட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ADVERTISEMENT

தவளகிரி முருகன் கோயிலில்...

சத்தியமங்கலம் அடுத்த கொமராபாளையம் தவளகிரி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி சுவாமிக்கு பாலபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரத்துக்கு பின் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவையொட்டி, சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் குழந்தைகள் ஆடிய காவடி ஆட்டம் பக்தா்களை பெரிதும் கவா்ந்தது.

பவானி பழநியாண்டவா் கோயிலில்...

பவானி பழநியாண்டவா் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன. பழநியாண்டவருக்கு திருக்கல்யாணம் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்துடன் வள்ளி, தெய்வானை உடனமா் பழநியாண்டவா் தேரோட்டம் சங்கமேஸ்வரா் கோயில் முன்பிருந்து புறப்பட்டது.

பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன், கோயில் உதவி ஆணையா் சாமிநாதன் உள்ளிட்டோா் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தனா். தோ் செல்லும் வழியெங்கும் திரளான பக்தா்கள் பழனியாண்டரை வழிபட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT