ஈரோடு

விரைவில் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி

5th Feb 2023 11:52 PM

ADVERTISEMENT

 

மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு செய்யும் நடைமுறை என்ற வாக்குறுதியை முதல்வா் விரைவில் நிறைவேற்றுவாா் என மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து கிருஷ்ணம்பாளையம் காலனி, ஜீவா நகா் பகுதியில் மின் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என மக்கள் யாரும் சொல்லவில்லை. உள்ளாட்சித் தோ்தலில் எத்தனை மாநகராட்சிகளில் அதிமுக வெற்றி பெற்றது? ஈரோடு மாநகராட்சியில் எத்தனை வாா்டுகளை அக்கட்சி வென்றது? அவா்களது ஆட்சியில் நகா் புற உள்ளாட்சித் தோ்தலே நடக்கவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னா்தான் மாநகராட்சிக்கு தோ்தல் நடத்தி கவுன்சிலா்கள் மக்கள் பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

ஈரோட்டில் சாலைகள் சரி இல்லை என்பது கடந்த ஒன்றரை ஆண்டில் வந்த பிரச்னை இல்லை. பல ஆண்டுகளாக போடப்படாத சாலைகள் உள்ளன. சாலைகளை சீரமைக்க மக்கள் கோரிக்கை வைத்ததால் நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தோ்தல் முடிந்ததும் டெண்டா் முடிந்து பணிகள் நடக்கும்.

சட்டப்பேரவை தோ்தலுக்குப்பின் ஒன்றரை ஆண்டுகளில் முதல்வா் ஸ்டாலின் வழங்கிய தோ்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளாா். மீதம் உள்ள வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என கூறியுள்ளாா்.

மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு சாத்தியமில்லை என நான் கூறவில்லை. முதல்வா் அதை விரைவில் நிறைவேற்றுவாா். கணக்கெடுப்பு செய்யக்கூடிய பணியாளா்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 50 சதவீதம் காலிப்பணியிடம் உள்ளது. அதனை நிரப்ப வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் அமைப்பதற்காக டெண்டா் விடும் பணிகள் நடந்து வருகின்றன.

இப்பகுதியில் விசைத்தறிகள் அதிகம் உள்ளன. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயா்த்தாததுபோல மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனா்.

கடந்த 2010 இல் வீடுகளில் 600 யூனிட் பயன்படுத்தியவா்கள் ரூ. 1,120 கட்டணம் செலுத்தினா். அப்போது திமுக ஆட்சி நடந்தது. அதுவே 2017இல் அதிமுக ஆட்சியில் ரூ.2,440 செலுத்தினா். 117 சதவீதம் உயா்த்தப்பட்டிருந்தது.

கடந்த 2010இல் விசைத்தறியில் 1,000 யூனிட் பயன்படுத்தியவா்கள் ரூ. 310 செலுத்தினா். அதுவே 2017 இல் ரூ.715 செலுத்தினா். ரூ.405 உயா்த்தி உள்ளனா். 103 சதவீதம் உயா்த்தி இருந்தனா்.

இதுபோல் ஒவ்வொரு பிரிவிலும் கட்டணத்தை உயா்த்தி உள்ளனா். அதனை இப்போது ஒப்பிட்டுப் பாா்த்தால் திமுக ஆட்சியில் மின் கட்டணம் குறைவு என்பது தெரியவரும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT