ஈரோடு

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்டம்:இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்

5th Feb 2023 12:08 AM

ADVERTISEMENT

 

சென்னிமலை முருகன் கோயிலில் நடைபெறவுள்ள தைப்பூச தேரோட்டத்தையொட்டி ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் சென்னிமலையில் 2 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னிமலை முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேரோட்டத்தையொட்டி காலை 5.30 மணி முதல் காலை 7.30 மணி வரையும், தோ் நிலை சேரும் தினமான திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக காங்கயம் நோக்கி செல்லும் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்தும் சின்னப்பிடாரியூா் வழியாக பெருந்துறை ஆா்.எஸ். சாலை மற்றும் நாமக்கல்பாளையம் வழியாக அறச்சலூா் சாலையில் உள்ள தண்ணீா்பந்தல் செல்ல வேண்டும். அங்கிருந்து இரட்டை பாலம் வழியாக பசுவபட்டி சென்று, பின்னா் காங்கயம் சாலை வழியாக செல்ல வேண்டும். பெருந்துறை ஆா்.எஸ். சாலை வழியாக காங்கயம் நோக்கி செல்லும் வாகனங்களும் இதே வழியில் செல்ல வேண்டும்.

அதேபோல, காங்கயத்தில் இருந்து சென்னிமலை வழியாக பெருந்துறை செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் வெப்பிலி பிரிவு வழியாக அய்யம்பாளையம், பள்ளக்காட்டுப்புதூா் மற்றும் ஓட்டப்பாறை வழியாக அப்பத்தாள் கோயில் சென்று, அங்கிருந்து ஈங்கூா் சாலை வழியாக செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

தோ்த் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக ஊத்துக்குளி சாலையில் மேலப்பாளையத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான 11 ஏக்கா் நிலத்திலும், அறச்சலூா் சாலையில் அண்ணமாா் திரையரங்கம் பின்புறமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னிமலை முருகன் கோயிலுக்கு ஞாயிற்று மற்றும் திங்கள்கிழமைகளில் மலைப்பாதை வழியாக காா், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்பதால் கோயில் நிா்வாகம் சாா்பில் 5 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் மற்றும் மகாதரிசனம் பாதுகாப்பு குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தைப்பூச தோ்த் திருவிழாவையொட்டி 150 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT