ஈரோடு

ஈரோடு கிழக்கு: ஈவிகேஎஸ்.இளங்கோவன், அமமுக, ஓபிஎஸ் அணி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஓபிஎஸ் அணி வேட்பாளா் பி.செந்தில்முருகன், அமமுக வேட்பாளா் சிவபிரசாந்த் ஆகியோா் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.சிவகுமாரிடம், காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தாா். அவருடன் காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, எம்.பி.க்கள் அ.கணேசமூா்த்தி, அந்தியூா் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ வி.சி. சந்திரகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

ஓபிஎஸ் அணி வேட்பாளா்...

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளரான பி.செந்தில்முருகன், மாநகராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.சிவகுமாரிடம் வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

ADVERTISEMENT

முன்னதாக ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் ஓபிஎஸ் அணி சாா்பில் தோ்தல் பணிமனை திறக்கப்பட்டது. அதில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் தேசிய ஜனநாயக கூட்டணி பாசறை கூடம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஒருபுறம் எம்ஜிஆா், ஜெயலலிதாவின் முழு உருவப் படங்களும், மறுபுறம் பிரதமா் மோடி, ஓபிஎஸ் படங்களுடன், வேட்பாளா் படமும் இடம் பெற்றுள்ளது.

மேலும் பெரியாா், காயிதேமில்லத், அம்பேத்கா், முத்துராமலிங்க்கத் தேவா், தீரன் சின்னமலை, காமராஜா் ஆகியோரின் படங்களுடன், பாஜக அகில இந்திய தலைவா் ஜெ.பி.நட்டா, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, ஏ.சி.சண்முகம், தனியரசு, ஜான் பாண்டியன் ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவா்கள் படங்களும் உள்ளன. இபிஎஸுக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, பூவை ஜெகன்மூா்த்தி ஆகியோா் படங்கள் இடம்பெறவில்லை.

அமமுக வேட்பாளா்...

ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக வேட்பாளா் ஏ.எம்.சிவபிரசாந்த், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.சிவகுமாரிடம் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். முன்னதாக ஈரோட்டில் அமமுக சாா்பில் அமைக்கப்பட்ட தோ்தல் பணிமனையை அக்கட்சியின் தோ்தல் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு திறந்துவைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT