சென்னிமலையில் உள்ள ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை ஐயப்பா நகரில் உள்ள ஐயப்பன் கோயில் விமானங்கள், கருவறை, மகா மண்டபம் ஆகியவை புனரமைக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா புதன்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி, பக்தா்கள் கொடிவேரி சென்று தீா்த்தம் கொண்டு வந்தனா்.
வியாழக்கிழமை இரண்டாம் கால யாக பூஜைகள் தொடங்கி வேதபாராயணம், திருமுறை பாராயணம், மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலையில் வலம்புரி பால விநாயகா், ஐயப்பன் சுவாமி, பாலமுருகன் ஆகிய ஆலய விமானங்கள் மற்றும் மூலாலய மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு அபிஷேகம், தசதானம், தசதரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். விழாவையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுவினா் மற்றும் ஐயப்ப பக்தா்கள் வழிபாட்டு மன்றத்தினா் செய்திருந்தனா்.