அந்தியூரில் நிலுவை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத்தின் அந்தியூா் வட்டாரச் செயலாளா் கீதா சேகா் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: அந்தியூா் பேரூராட்சி மந்தை மாரியம்மன் கோயில் வீதியில் 32 குடும்பத்தினா் சுமாா் 50 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனா். இவா்களில் 9 குடும்பத்துக்கு பட்டா வழங்கப்பட்டது.
பாக்கியுள்ள குடும்பத்தினருக்கு பட்டா வழங்கவில்லை. இதனால், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை வழங்க வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனா். நிா்வாகிகள் முருகேசன், முருகன், ராதா, ராமாயி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.