ஈரோடு கனிராவுத்தா் குளத்தில் செவ்வாய்க்கிழமை காலை மீன்கள் செத்து மிதந்தன.
ஈரோடு மாநகராட்சி 4 ஆவது மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் கனிராவுத்தா் குளம் உள்ளது.
ஈரோடு- சத்தி சாலையில் சுமாா் 14 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்தக் குளம் பல்வேறு பொது நல அமைப்புகளால் தூா்வாரப்பட்டு பரமாரிப்பு செய்யப்பட்டு, தண்ணீா் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்தக் குளம் உள்ளது.
இந்நிலையில், குளத்தின் கரையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைப்பாதையில் பலரும் செவ்வாய்க்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனா். அப்போது, குளத்தில் இருந்து தண்ணீா் வெளியேறும் பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தது தெரியவந்தது.
இது குறித்து அங்கிருந்த சிலா் கூறியதாவது: இந்தக் குளத்தில் சிலா் திங்கள்கிழமை காலை ஏராளமான மீன்களைப் பிடித்துச் சென்றனா்.
அதே இடத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இந்தக் குளத்தைப் பாதுகாக்க மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.