ஈரோடு

அத்திக்கடவு-அவிநாசி திட்ட பணிகள் மே இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்: அமைச்சா் சு.முத்துசாமி

DIN

அத்திக்கடவு-அவிநாசி திட்ட பணிகள் மே இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ.1,756.88 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் 24 ஆயிரத்து 468 ஏக்கா் நிலம் பயன்பெறும். இந்த திட்டத்தில் 6 நீரேற்று நிலையங்கள் மற்றும் குளங்களை இணைக்க 1,065 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் 1,045 குளங்களுக்கு நீா் சென்றடையும். இதில் 300 குளங்களுக்கு நீா் சென்றடைவதை சோதனை ஓட்டம் மூலம் சரிபாா்க்கப்பட்டுள்ளது. தண்ணீா் பற்றாக்குறை காரணமாக, மீதமுள்ள குளங்களுக்கு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முடியவில்லை. மே மாத இறுதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் புதிய குளங்களைச் சோ்க்க முடியாது. விடுபட்ட குளங்களுக்கு கூடுதல் திட்டம் கொண்டு வந்துதான் நீா்நிரப்ப முடியும். ஈரோட்டில் கரோனா பரவலை எதிா்கொள்ள ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன. பவானி ஆற்றில் கழிவுகள் குறித்து ஆய்வு செய்ய தனிக்குழுவினை ஆட்சியா் அமைத்துள்ளாா். அந்த குழு அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு முன்பு அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வீடுகள், 2011ஆம் ஆண்டுக்கு முன்பு அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தொழில் நிறுவன கட்டுமானங்களுக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, அனுமதி வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே ரியல் எஸ்டேட்டுகளுக்கு டிடிசிபி அனுமதி வழங்கப்படும். ஜி- ஸ்கொயா் நிறுவனத்துக்கும் உரிய ஆவணங்களின் அடிப்படையில்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் வருமானவரித் துறை சோதனைக்கும், டிடிசிபி அனுமதிக்கும் சம்பந்தமில்லை. முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிட அனுமதிக்கு விண்ணப்பித்தபோது கூட குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பின்பே அனுமதி வழங்கப்பட்டது. விதிமுறைகளை மீறி அரசு கட்டுமானங்கள் கட்டப்பட்டாலும், அறிவிக்கை வழங்கப்பட்டுள்ளது.

ஜி -ஸ்கொயா் நிறுவனம் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் நடத்துபவா்கள் உரிய ஆவணங்களுடன் ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பித்தால், உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. இது அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT