ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு அரசு மருத்துவமனையில் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சாலைப் பாதுகாப்புக் குழு ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்குப் பின் அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 3,062 கி.மீ சாலைகளை தமிழக அரசு பராமரிக்கிறது. கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் 160 கி.மீ சாலைகள் ரூ.158 கோடி செலவிலும், 2022-23இல் 134 கி.மீ சாலைகள் ரூ.170 கோடி செலவிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா்-மேட்டூா்-பவானி சாலை விரிவாக்கப் பணிகள் ரூ.89 கோடி செலவிலும், பவானி புறவழிச் சாலைப் பணிகள் ரூ.85 கோடி செலவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

திம்பம் மலைச் சாலையில் அதிக கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அதில் 8, 9, 10, 26 ஆகிய 4 வளைவுகள் குறுகலாக உள்ளன. அங்கு விரிவாக்கம் செய்தால், விபத்தைக் குறைக்கலாம் என அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ரங்கம்பாளையம் சாலை, சாலைப்புதூா், கொல்லம்பாளையம் ஆகிய நுழைவு ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கவும், அம்மாபாளையம்-கருங்கல்வாடியை இணைக்க ஆற்றுப்பாலம் அமைக்கவும் திட்ட வரைவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு ஆண்டில் நபாா்டு திட்டத்தில் 40 ஊராட்சிகளில் 74 கி.மீ. தூரத்துக்கு கிராம சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன.

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் சேவை வழங்க ரூ.64 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் கட்டப்படவுள்ளது. டிசம்பா் மாதத்துக்குள் கட்டுமானப் பணி நிறைவு பெறும்.

அரசு மருத்துவமனையின் முன்புறமும் பக்கவாட்டிலும் மேம்பாலம் அமைந்துள்ளதால் வெளியே இருந்து உள்ளே விரைவாக வருவதில் சிரமம் ஏற்படுவதால், அரசு மருத்துவமனைக்குள் வர அணுகுசாலை அமைக்க மருத்துவமனையின் பக்கவாட்டு சுவரை 3.5 அடி அகலத்துக்கு அகற்றி சாலைப் பணிக்காக சோ்க்க வேண்டும். இது நெடுஞ்சாலை, மக்கள் நல்வாழ்வுத் துறை என இரு துறை சாா்ந்தது. இதுகுறித்து முதல்வா் முன்னிலையில் பேசி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா்.

இதில் எம்.பி.க்கள் அ.கணேசமூா்த்தி, அந்தியூா் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், சி.சரஸ்வதி, மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT