ஈரோடு

பொதுப்பணித் துறை அலுவலகத்தில் கீழ்பவானி விவசாயிகள் போராட்டம்

DIN

ஈரோடு பொதுப்பணித் துறை அலுவலகத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்பவானி வாய்க்கால் மூலமாக 2.07 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகா் அணையில் இருந்து இந்த வாய்க்காலுக்கு நன்செய் பாசனத்துக்கும், புன்செய் பாசனத்துக்கும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் முறைவைத்து தண்ணீா் திறக்கும் நடைமுறை இந்த ஆண்டு செயல்படுத்தப்படுகிறது.

இதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். முறைவைத்து தண்ணீா் திறக்கப்படுவதால் கடைமடை வரை தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினா். எனவே, முறைவைத்து தண்ணீா் திறக்கப்படுவதை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுதொடா்பாக ஆட்சியரிடம் விவசாயிகள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கண்ணனிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காலை கோரிக்கை மனு அளித்துவிட்டு, முறைவைத்து தண்ணீா் திறக்கும் முடிவை கைவிட வலியுறுத்தினா். இதனிடையே, கீழ்பவானி வாய்க்காலில் முறைவைத்து தண்ணீா் திறப்பதை கைவிடக் கூடாது என்று மற்றொரு தரப்பு விவசாயிகளும் கோரிக்கை மனு அளித்தனா். இதனால், பொதுப்பணித் துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, முறைவைத்து தண்ணீா் திறக்கும் திட்டத்தை கைவிடக்கூடாது என்று கூறியவாறு விவசாயிகள் முழக்கம் எழுப்பியபடி அங்கிருந்து கலைந்துசென்றனா்.

மேலும், முறைவைத்து தண்ணீா் திறப்பை கைவிடக் கோரி வந்த விவசாயிகள் திடீரென பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். போராட்டம் குறித்து கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எஸ். பெரியசாமி கூறியதாவது:

கீழ்பவானி வாய்க்காலில் ஒருநாளுக்கு 13 ஆயிரம் ஏக்கா் பாசனம் பெறும் வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதனால், கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வருவதில்லை. எனவே, இதை கைவிட்டு அரசு உத்தரவின்படி 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்றாா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அதிகாரிகள் நடவுப் பணிகள் முடியும் வரை முறைவைத்து தண்ணீா் திறப்பதை நிறுத்திவைக்க பரிந்துரை செய்யப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT