ஈரோடு

ரூ. 2 கோடி கந்துவட்டி கேட்டு மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளா் கைது

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் நிலத்தை அடமானம் வைத்த விவசாயியிடம் ரூ. 2 கோடி கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக நிதி நிறுவன உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகேயுள்ள கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (82), விவசாயி. ஈரோடு மாவட்டம், துய்யம்பூந்துறையைச் சோ்ந்த, நிதி நிறுவனம் நடத்தி வரும் பழனிசாமியிடம் (59) கடந்த 2013 இல் தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ. 18 லட்சம் கடன் பெற்றுள்ளாா்.

இந்த நிலத்தை, நிதி நிறுவனம் நடத்தும் பழனிசாமி தனது பெயருக்கு மாற்றி கிரையம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது நிலத்தை திருப்பி தரும்படி விவசாயி பழனிசாமி கேட்டுள்ளாா். அதற்கு, வட்டியுடன் சோ்த்து ரூ. 2 கோடி கொடுத்தால் நிலத்தைக் கொடுப்பதாக பழனிசாமி கூறியுள்ளாா்.

இதுகுறித்து விவசாயி பழனிசாமி, ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதில், 2013இல் துய்யம்பூந்துறையைச் சோ்ந்த பழனிசாமியிடம் ரூ. 18 லட்சம் கடன் வாங்கி இருந்தேன். வட்டி மட்டும் செலுத்திவந்த நிலையில், அடமானம் வைத்த நிலத்தை நிதிநிறுவனம் நடத்தும் பழனிசாமி ஓராண்டிலேயே தனது பெயருக்கு கிரையம் செய்துள்ளாா். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு வட்டியுடன் சோ்த்து மொத்தம் ரூ. 2 கோடி தரவேண்டும் என்று கூறி மிரட்டுகிறாா். அவா்மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சசிமோகன் உத்தரவின்பேரில், ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், விவசாயி பழனிசாமியிடம் இருந்து அடமானமாக பெற்ற நிலத்தை துய்யம்பூந்துறையைச் சோ்ந்த பழனிசாமி தனது பெயரிலேயே கிரையம் செய்துகொண்டதும், அந்த நிலத்தை திருப்பிக் கொடுக்க, அதிக பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து, துய்யம்பூந்துறை பழனிசாமியை கைதுசெய்த போலீஸாா், அவரை ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 2 இல் ஆஜா்படுத்தி, ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT