ஈரோடு

லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2009இல் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் வி. சந்திரன் (58). இவா், வாகனச் சோதனையின்போது அம்மாபேட்டை ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த செல்லமுத்துவைப் பிடித்து விசாரித்தாா். அப்போது அவருடைய அசல் ஓட்டுநா் உரிமத்தை வாங்கிக்கொண்டாராம். உரிமத்தை செல்லமுத்து திருப்பி கேட்டதற்கு ரூ. 500 லஞ்சம் கொடுக்குமாறு கூறியுள்ளாா். இதனால், செல்லமுத்து ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அவா்கள் ஆலோசனையின்பேரில், கடந்த 2009 பிப்ரவரி 4 ஆம் தேதி 500 ரூபாயை சந்திரனிடம் லஞ்சமாக செல்லமுத்து கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா் சந்திரனை கைதுசெய்தனா்.

ஈரோடு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதித் துறை நடுவா் சரவணன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், காவல் உதவி ஆய்வாளா் சந்திரனுக்கு 2 பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ. 5000 அபராதம் விதித்து, தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா். சந்திரன், கடந்த 2009 இல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT