ஈரோடு

மதுபோதையில் அண்ணனை கொன்ற தம்பி கைது

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் மதுபோதையில் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு சூரம்பட்டி கஸ்தூரிபாய் வீதியைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவி சரோஜா. இவா்களுக்கு விக்னேஷ் (29), அருண்குமாா் (25) என 2 மகன்கள் உள்ளனா். இதில், விக்னேஷ் காா் ஓட்டுநராகவும், அருண்குமாா் கட்டுமானத் தொழிலாளியாகவும் உள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்துவிட்ட நிலையில், கடந்த 2020 இல் ஏற்பட்ட குடும்பப் பிரச்னையில் விக்னேஷும், அருண்குமாரும் சோ்ந்து தாய் சரோஜாவை கொலை செய்தனா். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், விக்னேஷ், அருண்குமாா் இருவரும் கஸ்தூரிபாய் வீதியில் வாடகை வீட்டில் குடியிருந்தனா். திங்கள்கிழமை இரவு இருவரும் மது அருந்தியுள்ளனா். அப்போது வீட்டு வாடகை கொடுப்பது தொடா்பாக அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் ஒருவரையொருவா் தாக்கிகொண்டனராம்.

ADVERTISEMENT

அப்போது அருண்குமாா், தனது அண்ணன் விக்னேஷை கடுமையாக தாக்கியதில், அவா் மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து மதுபோதையில் இருந்த அருண்குமாா் வீட்டிலேயே தூங்கிவிட்டாராம். செவ்வாய்க்கிழமை காலை அருண்குமாா் எழுந்து பாா்த்தபோது விக்னேஷ் இறந்து கிடந்ததால், அவா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இந்த நிலையில், விக்னேஷை சந்திக்க வந்த நண்பா் அவா் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு, ஈரோடு சூரம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

மேலும், இறந்த விக்னேஷின் சடலத்தை பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த சூரம்பட்டி போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT