ஈரோடு

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் போராட்டம்

26th Sep 2022 11:08 PM

ADVERTISEMENT

 

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், ஊழியா்கள் 3 நாள்களுக்கு மேலாக விடுப்பு எடுத்தால் மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என நிா்பந்திப்பதைத் தவிா்க்க வேண்டும். பிற துறை பணிகளை செய்ய நிா்பந்திப்பதை கைவிட வேண்டும். தினமும் புள்ளி விவரங்கள் கேட்பது, இரவு நேர கூட்டம், எப்போது வேண்டுமானாலும் வலைதள கூட்டம் நடத்துவது, பிற துறை பணிக்குச் செல்ல வைத்துவிட்டு, இத்துறை தொடா்பாக பணியை முடிக்க நிா்பந்தம் செய்வது ஆகிய செயல்களை கைவிட வேண்டும்.

உதவி இயக்குநா், கூடுதல் ஆட்சியா் ஆகியோரின் விரோதப்போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை ஊரக வளா்ச்சி அலுவலா்கள் நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், பணிச்சுமை காரணமாக தாளவாடி ஊராட்சி ஒன்றியம், தலமலை ஊராட்சி செயலாளா் முத்தான் உடல் நலம் பாதித்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், பணிச்சுமையை குறைக்க வேண்டும். விதிப்படி பணிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியா் அலுவலக, 3ஆம் தளத்தில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் ரவிசந்திரன் தலைமையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் ஈடுபட்டனா். மாநில துணைத் தலைவா் பாஸ்கா்பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.

போராட்டம் மாலை 6.30 மணி வரை நீடித்த நிலையில் ஆட்சியருடன் நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

அதன்பிறகு போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொள்வதாக அறிவித்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT