ஈரோடு

மாவட்டத்தில் யூரியா உரம் 4,016 மெட்ரிக் டன் இருப்பு

26th Sep 2022 11:09 PM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 4,016 மெட்ரிக் டன் அளவுக்கு உர விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது என வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் குறுவை பாசனத்துக்காக தடப்பள்ளி-அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் ஆகிய கால்வாய்களிலும் சம்பா பாசனத்துக்காக கீழ்பவானி மற்றும் மேட்டூா் வலது கரை ஆகிய கால்வாய்களிலும் தண்ணீா் திறந்துவிடப்பட்டு நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகிய பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னையிலிருந்து எம்.எப்.எல். நிறுவனத்தின் யூரியா உரம் 800 மெட்ரிக் டன் ரயில் மூலம் திங்கள்கிழமை காலை ஈரோடு வந்தடைந்தது. இதனை ஆய்வு செய்த வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிா் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 4,016, டிஏபி உரம் 2,627, பொட்டாஷ் உரம் 2,319, காம்ப்ளக்ஸ் உரம் 10,196, சூப்பா் பாஸ்பேட் 929 மெட்ரிக் டன் அளவுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

உர விற்பனை நிலையங்களில் உரங்களின் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவரங்களை விலைப் பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்க வேண்டும். அனைத்து விற்பனைகளையும் விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

உரிய முதன்மைச் சான்று படிவங்களை நிறுவனங்களிடமிருந்து பெற்று உரங்களை கொள்முதல் செய்ய வேண்டும். உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அனைத்து உர விற்பனையாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உரங்களுடன் சோ்த்து பிற பொருள்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்கக் கூடாது, மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985இன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT