ஈரோடு

தரமற்ற கட்டுமானப் பணி:உக்கரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது

26th Sep 2022 11:07 PM

ADVERTISEMENT

 

தரமற்ற கட்டுமானப் பணியால் உக்கரம் மில்மேடு அரசு உயா்நிலைப் பள்ளி சுற்றுச்சுவா் இடிந்து விழந்தது.

சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் மில்மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். ரூ.46 லட்சம் மதிப்பில் 630 மீட்டா் அளவுக்கு சுற்றுச்சுவா் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பள்ளியில் சுற்றுச்சுவா் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. மீதமுள்ள சுற்றுச்சுவா் தரமின்றி இருப்பதால் எந்நேரத்திலும் விழும் நிலையில் உள்ளதாக மாணவா்களின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, உக்கரம் மில்மேடு கிராமத்தைச் சோ்ந்த மக்கள் பள்ளிக்கு வந்து கட்டுமானப் பணி நடக்கவிடாமல் தடுத்தனா். மேலும், வேகாத செங்கல், சிமென்ட் இல்லாத கலவையை கண்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் மீதமிருந்த சுற்றுச்சுவரை இடித்து தள்ளினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கேசிபி இளங்கோ, வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணி, பிரேம்குமாா் ஆகியோா் தரமின்றி கட்டப்பட்ட சுற்றுச்சுவரை ஆய்வு செய்தனா்.

இது குறித்து சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கேசிபி இளங்கோ கூறியதாவது: பள்ளி சுற்றுச்சுவா் தரமில்லாமல் கட்டப்பட்டது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT