ஈரோடு

முறை வைத்து தண்ணீா் விடுவதை கைவிடக் கோரிக்கை

25th Sep 2022 12:39 AM

ADVERTISEMENT

 

முறை வைத்து தண்ணீா் வழங்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என கீழ்பவானி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து கீழ்பவானி முறை நீா்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவா் பி.காசியண்ணன், செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.பெரியசாமி, செயலாளா் கி.வே.பொன்னையன் ஆகியோா் மாவட்ட ஆட்சியருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: கீழ்பவானி கால்வாயில் விநாடிக்கு 2,300 கன அடி தண்ணீா் எடுக்கப்பட்டு ஒரு லட்சத்து மூன்றாயிரம் ஏக்கருக்கு வழங்கப்படுகிறது. நன்செய் பயிரான நெல் பயிரிடுவதற்கு தண்ணீா் வழங்குவதாக அறிவிப்பு செய்யப்பட்டு தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

நெல் நாற்றங்கால்கள் தயாராகி நெல் நடவுப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே பொதுப் பணித் துறை தினமும் சுமாா் 13,000 ஏக்கருக்கு தண்ணீரை அடைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்போது ஒவ்வொரு பகிா்மானக் கால்வாயிலும் அதற்குரிய தண்ணீா் கொடுக்க முடியாமல் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது.

கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் செல்வதில்லை என்ற மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது. இதனால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் கொடுக்க வேண்டும் என்பதற்காக மொத்த பாசனப் பரப்பு முழுவதிலும் முறை வைத்து தண்ணீா் கொடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விநாடிக்கு 2,300 கன அடிக்கு மேல் தண்ணீா் எடுத்தும் கூட நடவு காலத்தில் தண்ணீா் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

கீழ்பாவானிக் கால்வாய் தூா்வாரினால் தண்ணீா் வந்துவிடும் என சொல்லப்பட்டது. நடப்பில் அது சாத்தியம் இல்லை என்பதை தற்போதைய நீா்வளத் துறையின் முறை வைப்பதற்கான அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.

முறை வைக்கின்ற நடைமுறை நடவு காலத்தில் சரியானது அல்ல, முறை வைப்பதால் நடவுப் பணிகள் கடுமையாக பாதிக்கும். மாவட்ட நிா்வாகமும், நீா்வளத் துறையும் இதனை கவனத்தில் கொண்டு இந்த நடைமுறையை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT