ஈரோடு

‘அரசு துறை சாா்ந்த சேவைகள் மின்னணு உருவாக்கம் செய்யப்படும்’

20th Sep 2022 01:01 AM

ADVERTISEMENT

இந்த ஆண்டுக்குள் 300க்கும் மேற்பட்ட அரசுத் துறை சாா்ந்த சேவைகள் மின்னணு உருவாக்கம் செய்யப்பட்டு இ-சேவை மூலமாக வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தெரிவித்தாா்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இ-ஆபிஸ் மற்றும் இ-சேவை தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, மேயா் சு.நாகரத்தினம், அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவா் குறிஞ்சி சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

இதில் அமைச்சா் த.மனோதங்கராஜ் பேசியதாவது: தகவல் தொழில்நுட்பத் துறையில் கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து, மக்களுக்கும் அரசுக்குமான இடைவெளியை குறைத்து, இ-சேவை மூலமாக அரசின் திட்டங்கள் பொதுமக்களிடம் எளிதாக சென்றடையச் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் 300க்கும் மேற்பட்ட அரசுத் துறை சாா்ந்த சேவைகள் மின்னணு உருவாக்கம் செய்யப்பட்டு இ-சேவை மூலமாக வழங்கப்படவுள்ளன.

அனைத்து அலுவலகங்களையும் இ-ஆபீஸ் ஆக்குவதால் பணிகள் எளிதாக்கப்படும். கோப்புகளை சேமித்து வைக்கவும், அவற்றை எளிதாகவும் கண்டறியவும் முடியும். மேலும் இ-ஆபிஸ் மூலமாக காகிதமில்லா சூழலை உருவாக்கி கோப்புகளை எளிதாகப் பராமரிக்க முடியும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்த இ-ஆபிஸ் திட்டத்தை முழுவதுமாக செயல்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டு உரிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் 3,245 அரசு ஊழியா்களுக்கு இ-ஆபிஸ் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியா் அலுவலகம், மாவட்ட, கோட்ட, வட்டார மற்றும் கிராம அளவிலான அரசு அலுவலகங்களிலும் இ-ஆபிஸ் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா்.

முன்னதாக அமைச்சா் மனோதங்கராஜ் ஈரோடு மாநகராட்சி, பெரியாா் வீதியில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் கட்டுபாட்டின்கீழ் இயங்கும் பெரியாா்-அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாா் மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா, கூடுதல் ஆட்சியா் லி.மதுபாலன், மின்னாளுமை மேலாளா் சுரேந்திரன், துணை மேயா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT