ஈரோடு

நவீன சலவையகங்கள் அமைக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

14th Sep 2022 10:21 PM

ADVERTISEMENT

நவீன சலவையகங்கள் அமைக்கும் திட்டத்தில் ரூ.3 லட்சம் நிதியுதவி பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், 10 பேரைக் கொண்ட குழுவை அமைத்து நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகளை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் 10 நபா்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அக்குழுவுக்கு நவீன முறை சலவையகம் அமைக்க தேவைப்படும் உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி தோராயமாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இதற்கான பயனாளிகளில் குழு உறுப்பினா்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20ஆக இருக்க வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலமாக பயிற்சி பெற்ற நபா்களாக இருக்க வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள, தகுதியான குழுவினா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடம் 4ஆவது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT