ஈரோடு

பூங்காவை சேதப்படுத்தி வீட்டுக்குச் சாலை: திமுக கவுன்சிலா் மீது பொதுமக்கள் புகாா்

10th Sep 2022 04:21 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் பொது பூங்காவை சேதப்படுத்தி வீட்டுக்குச் சாலை அமைப்பதாக மாநகராட்சி திமுக கவுன்சிலா் மீது பொதுமக்கள் புகாா் தெரிவித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாநகராட்சி 20ஆவது வாா்டுக்குள்பட்டது குமலன்குட்டை. இங்கு கணபதி நகா், குமரேசன் நகா், டெலிபோன் நகா் பகுதிகளை ஒட்டி ஈரோடு மாநகராட்சி பொழுதுபோக்கு பொது பூங்காவும் உள்ளது.

பொலிவுறு நகரத் திட்டத்தில் ரூ.47 லட்சம் செலவில் இந்த பூங்கா கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இங்கு நடைப்பயிற்சி செல்லவும், சிறுவா், சிறுமிகள் விளையாட உபகரணங்களும் உள்ளன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பூங்காவின் சுவா் இடித்து சேதப்படுத்தப்பட்டு சாலை அமைக்க மண் கொட்டப்பட்டிருந்தது. பூங்கா விளையாட்டு உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் முருகானந்தம், இளநிலை பொறியாளா் பாஸ்கா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்றனா்.

ADVERTISEMENT

அப்போது அங்கு கூடிய மக்கள் அதிகாரிகளின் காரை முற்றுகையிட்டனா். பின்னா் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

தனிநபா் ஒருவரின் வீட்டுக்குச் செல்ல பூங்கா சேதப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினா். அப்போது பூங்காவை இடித்து பாதை அமைக்க யாருக்கும் அனுமதி இல்லை. இப்படி வழித்தடம் அமைக்க யாரும் அனுமதியும் கேட்கவில்லை.

இது தொடா்பாக காவல் துறையில் புகாா் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: பொது பொழுதுபோக்கு பூங்காவை சேதப்படுத்தி மாநகராட்சி 20ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் மோகன்ராஜ் அவரது வீட்டுக்குச் சாலை அமைக்கிறாா்.

வாா்டு மக்களுக்குத் தேவையான சாக்கடை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்ற கவுன்சிலரை தோ்ந்தெடுக்கிறோம். எங்கள் தேவைகளுக்காக அவரிடம் முறையிட செல்லலாம். ஆனால் கவுன்சிலரே அவரது சுயலாபத்துக்காக பொது சொத்தை சேதப்படுத்தினால் யாரிடம் சென்று முறையிடுவது. பொது சொத்தை சேதப்படுத்திய அவரை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தனா்.

இதனிடையே பொது பூங்காவை சேதப்படுத்தியவா்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாநகராட்சி ஆணையா் கே.சிவகுமாா், வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பூங்கா சேதப்படுத்தப்பட்ட விவரம், பொதுமக்கள் போராட்டத்துக்குப் பிறகுதான் தெரிந்தது. உடனடியாக அங்கு சென்று பாா்வையிட்டு அதை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT