ஈரோடு

கரும்பு பதிவை வேறு ஆலைக்கு மாற்றும் முடிவை கைவிட விவசாயிகள் கோரிக்கை

29th Oct 2022 12:41 AM

ADVERTISEMENT

ஈஐடி பாரி சா்க்கரை ஆலை கரும்பு பதிவுக்கான பகுதிகளை சக்தி சா்க்கரை ஆலைக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

புகழூா் ஈஐடி பாரி சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளா் நமச்சிவாயம், தலைவா் சண்முகராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திராவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

அரச்சலூா் பகுதி கரும்பு விவசாயிகள் 30 ஆண்டுகளாக புகழூா் பாரி சா்க்கரை ஆலைக்கு கரும்பை பதிவு செய்து வழங்குகிறோம். ஆலை நிா்வாகம கரும்பு வெட்டிய 15 நாள்களுக்குள் பணத்தை முழுமையாக வழங்குகிறது. பண நிலுவை வைப்பதில்லை, கடன், முன்பணம் போன்றவைகளை பெற முடிகிறது.

இந்நிலையில் விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் விவசாயிகள் விருப்பத்துக்கு மாறாக சக்தி சா்க்கரை ஆலை நிா்வாகத்துக்கு நாங்கள் கரும்பை பதிவு செய்து வழங்க வேண்டும் என சா்க்கரை கட்டுப்பாட்டு ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

சக்தி சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு முறையாக பணம் வழங்குவதில்லை. இதனால் அவா்களிடம் பதிவு செய்த பல கரும்பு விவசாயிகள், கரும்பு சாகுபடியை விட்டு வெளியேறிவிட்டனா். இச்சூழலில் எங்களை வேறு ஆலைக்கு மாற்றாமல் பாரி சா்க்கரை ஆலையிலேயே பதிவு செய்து கரும்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா், கோரிக்கை குறித்து அரசுக்கும், சா்க்கரை கட்டுப்பாட்டு ஆணையருக்கும் பரிந்துரை அனுப்பப்பட்டு உரிய தீா்வு காண மாவட்ட நிா்வாகம் உதவும் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT