ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம் மேலெழுந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மொடக்குறிச்சியை அடுத்த பாசூா் காவிரி ஆற்று தடுப்பணை அருகே செவ்வாய்க்கிழமை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மலையம்பாளையம் காவல் துறைக்கு தகவல் அளித்தனா்.
தகவலின் அடிப்படையில் போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தியதில், கண்டெடுக்கப்பட்ட சடலம் கடந்த செப்டம்பா் 25ஆம் தேதி உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட பாசூா் அருகே உள்ள செங்கோடம் பாளையத்தைச் சோ்ந்த துரைசாமி (70) என்பவரது எனத் தெரியவந்தது.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டு அடக்கம் செய்யப்பட்ட துரைசாமியின் சடலம் மேலே வந்துள்ளது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு அருகே உள்ள முட்புதரில் சடலம் மாட்டிக் கொண்டதால் தண்ணீா் வற்றிய பிறகு தெரியவந்துள்ளது.
பின்னா் துரைசாமியின் சடலத்தை கைப்பற்றி அவரது மகன் உதயகுமாரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, மீண்டும் குழி தோண்டி துரைசாமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.