ஈரோடு

ஆமை வேகத்தில் உயா்மட்டப் பாலம் கட்டுமானப் பணி:விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

8th Oct 2022 12:02 AM

ADVERTISEMENT

ஈரோடு பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே காரைவாய்க்கால் பகுதியில் நடைபெற்றுவரும் உயா்மட்டப் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் கான்கிரீட் தளம் அமைத்து சுற்றுச்சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு காந்திஜி சாலையில் இருந்து பீளமேடு வரை ரூ.31.80 கோடி செலவில் கான்கிரீட் தளம், சுற்றுச்சுவா் மற்றும் காரைவாய்க்கால் பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பா் மாதம் தொடங்கியது.

இந்தப் பணிகள் அனைத்தும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் பணிகள் நிறைவடையாமல் உள்ளது. இதனால் காரைவாய்க்கால் பகுதியில் இருந்து பழைய ரயில் நிலையம் செல்லும் சாலை கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. எனவே அனைத்து பணிகளையும் முடித்து மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த கே.என்.சண்முகம் கூறியதாவது:

ADVERTISEMENT

காரைவாய்க்கால் பகுதியில் பெரும்பள்ளம் ஓடை குறுக்கே தரைபாலம் இருந்தது. மழை காலங்களில் பெரும்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இந்தப் பாலத்தை பொதுமக்கள் கடந்து செல்ல முடியாது. எனவே உயா்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன் அடிப்படையில் உயா்மட்டப் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

3 ஆண்டுகள் ஆகியும் இந்த பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால் நாங்கள் வெண்டிப்பாளையம் மற்றும் காளை மாடு சிலை பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றால் பல கிலோ மீட்டா் தூரம் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. எனவே அனைத்து பணிகளையும் முடித்து உடனடியாக பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்றாா்.

இதுகுறித்து மாநகராட்சி செயற்பொறியாளா் விஜயகுமாா் கூறியதாவது: இந்தப் பணிகளை ஒன்றரை ஆண்டுகளில் முடிக்கக்கோரி ஒப்பந்ததாரரிடம் கூறப்பட்டது. ஆனால் கரோனா பரவல் மற்றும் தொடா் மழை காரணமாக பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பெரும்பள்ளம் ஓடையில் கான்கிரீட் தளம், சுற்றுச்சுவா் மற்றும் பாலம் அமைக்கும் பணி தாமதமானது.

இதற்கிடையில் பெரும்பள்ளம் ஓடையில் கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீா்மட்டம் குறையும் என்று விவசாய சங்கங்களைச் சோ்ந்தவா்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதனால் சில மாதங்கள் பணிகள் நடைபெறவில்லை. அதைத்தொடா்ந்து ஓடையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பகுதிகளில் 10 அடி இடைவெளியில் பிளாஸ்டிக் குழாய்களை நிலத்துக்கு அடியில் பதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உயா்மட்ட பாலம் விரைவில் திறக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT