ஈரோடு

நெல் பயிருக்கு காப்பீடு பிரீமியம் ஏக்கருக்கு ரூ.555 நிா்ணயம்

8th Oct 2022 12:03 AM

ADVERTISEMENT

பிரதமரின் திருந்திய பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு பிரீமியமாக ஏக்கருக்கு ரூ.555 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கிப் பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதமரின் திருந்திய பயிா் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிா் பிா்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிா்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிா்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களைச் சோ்ந்த அனைத்து விவசாயிகளும் இந்தத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம். சம்பா நெல் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.554.25 செலுத்த வேண்டும்.

அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிா்காக்களைச் சாா்ந்த கடன் பெறும் விவசாயிகள் பயிா் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிா்காக்களைச் சாா்ந்த கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிா் சாகுபடி சான்றை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றை பொதுசேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக நவம்பா் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT