ஈரோடு

ஈரோட்டில் அடிக்கடி மூடப்படும் ரயில்வே கேட்டால் அவதி: ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

8th Oct 2022 12:01 AM

ADVERTISEMENT

ஈரோடு பழைய ரயில் நிலையம் (வெண்டிபாளையம்) அருகில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 50 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் தரக்கூடிய ரயில் நிலையங்களில் ஈரோடு ரயில் நிலையமும் ஒன்று. ஈரோடு வழியாக தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் வந்து செல்கின்றன. ரயில் நிலையம் அருகே உள்ள வெண்டிபாளையம் பகுதியில் அடுத்தடுத்து 3 ரயில் பாதைகள் செல்வதால் ரயில்வே கேட் அமைக்கப்பட்டு ரயில்கள் வரும்போது மூடப்பட்டு விடுகின்றன.

ஈரோடு வழியாக சென்னை செல்லும் ரயில்கள், கேரளம், கா்நாடக மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் என ஏராளமான ரயில்கள் இவ்வழியாகச் செல்வதால் அடிக்கடி வெண்டிபாளையம் ரயில்வே கேட் மூடப்படுகிறது. 30 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த கேட் மூடப்பட்டு திறப்பதற்கும் நேரம் ஆவதால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வரும் நிலையில் நெரிசலைக் குறைக்க இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டியது கட்டாயத் தேவையாகி உள்ளது.

50 ஆண்டு கால கோரிக்கை:

ADVERTISEMENT

இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 50 ஆண்டுகளாக பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் இதுகுறித்து தீவிரமாக கவனம் செலுத்தாமல் இருந்து வருவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆட்சியாளா்களும், ரயில்வே நிா்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போக்குவரத்து நெரிசல் குறையும்:

இதுகுறித்து தெற்கு ரயில்வே முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினா் கே.என்.பாஷா கூறியதாவது:

ஈரோட்டிலிருந்து கோணவாய்க்கால், வெண்டிபாளையம், பழைய ரயில் நிலையம் வழியாக சோலாா் சென்று, ஈரோடு-கரூா் சாலை, முத்தூா் சாலைக்கு எளிதில் செல்ல பழைய ஈரோடு-கரூா் சாலையையே வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனா். தவிர அப்பகுதியில் பொதுப் பணித் துறை அலுவலகம், கீழ்பவானி நீா்வடிகால் மைய அலுவலகம், கல்வித் துறை அலுவலகம் என அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

ஈரோடு பழைய ரயில் நிலையம் ரயில் பாதை வழியாக சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பல ரயில்கள் அடிக்கடி வருகின்றன. இதனால் இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் அவசர கால ஆம்புலன்ஸ்கள் கூட கொல்லம்பாளையம் சுற்றியே செல்லவேண்டிய நிலை தொடா்கிறது.

இங்கு மேம்பாலம் அமைந்தால் ஈரோடு மாநகரில் பெரும் பிரச்னையாக உள்ள போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்க முடியும். இப் பகுதியில் மேம்பாலம் கட்ட கடந்த 2016 ஆம் ஆண்டு சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் ஆய்வு செய்தாா். ஆனால் அதன்பிறகு ரயில்வே நிா்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்த ரயில்வே கேட்டால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநில அரசும், ரயில்வே நிா்வாகமும் ஆய்வு செய்து பழைய ரயில் நிலையம் அருகில் மேம்பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT