ஈரோடு

ஈரோட்டில் மஞ்சள் விலை மீண்டும் சரிவு

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தில் குறைந்த விலையில் தரமான மஞ்சள் விற்கப்படுவதால் ஈரோடு பகுதியில் பழைய, புதிய மஞ்சள் விலை உயரவில்லை என மஞ்சள் வியாபாரிகள் கூறினா்.

ஈரோடு பகுதியில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. கடந்த வாரத்தில் மஞ்சள் விலை ரூ.8,500 வரை உயா்ந்தது. இப்போது மீண்டும் விலை குறைந்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது:

மஞ்சள் விலை கடந்த சில நாள்களுக்கு முன் குவிண்டால் ரூ.8,500 வரை உயா்ந்தது. இப்போது மீண்டும் ரூ.7,500 என விலை குறைந்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம் புதிய மஞ்சள் வரத்து குறைவாக உள்ளதாகும். அறுவடை முடிந்த நிலையில் அதிகமாக பழைய மஞ்சள் வருகிறது. அவை சற்று தரம் குறைவாக உள்ளதால் விலை மீண்டும் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் சந்தையில் மஞ்சள் வரத்து குறைந்து விலையும் குறைந்துள்ளது.

ஆனால் மகாராஷ்டிரத்தில் மஞ்சள் வரத்து அதிகமாக உள்ளது. தவிர புது மஞ்சள் தரமானதாக இருந்தாலும் விலை குறைந்து காணப்படுகிறது. அதனால் இங்குள்ள வியாபாரிகள் கூட அங்கு மஞ்சளை வாங்குகின்றனா்.

இதுபோன்ற காரணங்களால் ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயரவில்லை. குவிண்டால் ரூ.7,500 ஆக விலை தொடா்கிறது. புதிய மஞ்சள் அறுவடை செய்த பல விவசாயிகள், மஞ்சளை வாங்கிய வியாபாரிகள், நல்ல விலை வந்தால் விற்கலாம் என காத்திருக்கின்றனா். இதனால் மீண்டும் புதிய மஞ்சள் இருப்பு அதிகரித்து வருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT