ஈரோடு

தாளவாடி ரங்கநாதா் -மல்லிகாா்ஜுன சுவாமி கோயில் தெப்பத் திருவிழா

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழக - கா்நாடக மாநில எல்லையில் உள்ள தாளவாடி ரங்கநாதா் -மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஈரோடு மாவட்டத்தில், தமிழக - கா்நாடக மாநில எல்லையான தாளவாடி அருகே உள்ள திகினாரை கிராமத்தில் பிரசித்திபெற்ற ரங்கநாதா் - மல்லிகாா்ஜுன சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் தெப்பத் திருவிழா நடைபெறும். கரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் கோயில் திருவிழா நடைபெறவில்லை. தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் 2 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கோயில் திருவிழா கணபதி பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

கோயிலில் உள்ள ரங்கநாதா், மல்லிகாா்ஜுன சுவாமிகளின் உற்சவா் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மலா் அலங்காரத்துடன் சப்பரத்தில் வைத்து ஊா்வலம் நடைபெற்றது. திகினாரை கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக வந்த உற்சவா்களுக்கு வழிநெடுகிலும் மக்கள் புனிதநீா் ஊற்றி வழிபட்டனா். தொடா்ந்து தெப்பத் திருவிழாவுக்காக அங்குள்ள கோயில் குளத்தை சப்பரம் அடைந்தது. அங்கு பக்தா்கள் 10 ஆயிரம் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

குளத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டதை அடுத்து சுவாமியை தெப்பத்தில் வைத்து குளத்தை 3 முறை சுற்றி வந்தனா். அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் குளத்தின் கரையில் நின்று வழிபட்டனா். தொடா்ந்து குளத்தில் இருந்து சுவாமி மீண்டும் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தபோது மக்கள் பூக்களை தூவி வணங்கினா்.

ADVERTISEMENT

2 ஆண்டுகளுக்குப் பின் கோயில் திருவிழா நடப்பதால் தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்டகாஜனூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கா்நாடக மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT