ஈரோடு

மலை கிராம மக்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கலப்பட சமையல் எண்ணெய்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மலை கிராம மக்களை குறிவைத்து குறைந்த விலையில் கலப்பட சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உணவுக்கு சுவை சோ்க்கும் சமையல் எண்ணெய் கலப்படம் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவபையாக மாறி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரப் பகுதிகளில் கலப்பட எண்ணெய் விற்று மக்களை ஏமாற்றிய சிலா், இப்போது கிராமப் பகுதிகளில் குறிப்பாக மலை கிராம மக்களை குறிவைத்து கலப்பட எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூா் பகுதியில் எண்ணெய் கடைகள் சிலவற்றில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் எனக் கூறி ஒரு லிட்டா் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்கின்றனா். குறைந்த விலையில் கிடைப்பதால் பா்கூா் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆபத்தை உணராமல் இந்த எண்ணெயை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனா்.

இது குறித்து மலைவாழ் மக்கள் சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன் கூறியதாவது: நல்லெண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்டவற்றை லிட்டா் ரூ.250க்கு குறைவாக விற்க முடியாது. ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்படும் எண்ணெய் நிச்சயம் கலப்பட எண்ணெய்தான். அந்தியூா் மற்றும் பா்கூா் மலைப் பகுதிகளில் உள்ள உணவகங்களிலும் இந்த குறைந்த விலை எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மலைப் பகுதி மக்கள் மட்டுமல்லாது, சுற்றுலா வரும் மக்களும் உடல் நலம் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் அந்தியூா் பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

வேதிப்பொருள்கள் கலப்பு:

இது குறித்து ஈரோட்டைச் சோ்ந்த நுகா்வோா் அமைப்பு நிா்வாகி எஸ்.ராஜமூா்த்தி கூறுகையில், கலப்பட எண்ணெயில் பல்வேறு வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. தேங்காய் எண்ணெயில் ஒயிட் மினரல் ஆயில் எனும் வேதிப்பொருள் சோ்க்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்துவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். சுத்தமான தேங்காய் எண்ணெய், வெப்பநிலை குறையும்போது உறைந்து விடும். பாத்திரத்தின் அடியில் கொழுப்புபோல படியும். கலப்பட எண்ணெய் அவ்வாறு படிவதில்லை. சுத்தமான தேங்காய் எண்ணெய், அதிக பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும். கலப்பட எண்ணெய் அவ்வாறு இருக்காது.

கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல், சமையல் எரிவாயு, டீசல், தாா் உள்ளிட்ட பொருள்களைப் பிரித்து எடுக்கப்பட்ட பின் கிடைக்கும் மினரல் ஆயில் என்ற வாசனையில்லாத, நிறமில்லாத, பசை தன்மையில்லாத எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய்தான் சமையல் எண்ணெய் உடன் கலக்கப்படுகிறது.

ஒரு லிட்டா் சுத்தமான நல்லெண்ணெய் ரூ.250க்கு மேல் விற்பனை செய்யப்படும் நிலையில், இதுபோன்ற கலப்பட நல்லெண்ணெய் ரூ.100 முதல் ரூ.150க்குள் கிடைக்கிறது. சுத்தமான நல்லெண்ணெயில் பாகுத்தன்மை அதிக அளவில் இருக்கும். வாசனை மிகுந்திருக்கும். கலப்பட நல்லெண்ணெயை குளிா்சாதனப் பெட்டியில் வைக்கும்போது உறைந்துவிடும், நறுமணமும் இருக்காது.

கடலை எண்ணெயை வாசனையை கொண்டு மட்டுமே கண்டறிய முடியும். இதற்காக மினரல் ஆயிலுடன் அதற்கான வாசனை நிறமிகளை சோ்த்து விடுகின்றனா். தூய்மையாக இருப்பதுபோல தெரிந்தாலும் இதில் ஆபத்து அதிகம். எந்த வகை எண்ணெயாக இருந்தாலும், அதில் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அதை குளிா்சாதனப் பெட்டியில் வைக்கும்போது உறைந்துவிடும். இதை கண்டறிந்தால் மட்டும் போதும் என்றாா்.

புகாா் அளிக்கலாம்:

இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கூறியதாவது: கலப்பட எண்ணெய்யை தொடா்ந்து பயன்படுத்தி வந்தால் முதலில் வாந்தி, வயிற்றுப்போக்கு என தொடங்கி புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படக்கூடும். உணவில் சோ்த்துக் கொள்வதால், ரத்தத்தின் உறையும் தன்மை அதிகமாகி விடும். இதனால் குறைந்த வயதில் கூட மாரடைப்பு ஏற்படும். அல்சா் போன்ற குடல் புண் நோய் மட்டுமின்றி, ஜீரண மண்டலமே பாதிக்கப்படும். புற்றுநோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்களும் தாக்கும் அபாயம் உள்ளது.

அந்தியூா் பகுதியில் கலப்பட சமையல் எண்ணெய் விற்பனை குறித்த புகாரின்பேரில் விரைவில் ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கலப்படம், தரமற்ற உணவுப் பொருள் தயாரிப்பு, விற்பனை குறித்து புகாரினை 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா் அளிக்கலாம் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT