ஈரோடு

மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

1st Oct 2022 05:05 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் இடிக்கப்பட்ட பூங்காவை சீரமைக்காதததைக் கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் வி.செல்வராஜ், ஆணையா் கே.சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவரும், 11ஆவது வாா்டு அதிமுக உறுப்பினருமான தங்கமுத்து பேசியதாவது: 20ஆவது வாா்டுக்கு உள்பட்ட குமலன்குட்டை டெலிபோன் நகரில் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பூங்காவை கடந்த சில நாள்களுக்கு முன்பு சிலா் இடித்துவிட்டனா். இந்தப் பூங்காவை மீண்டும் சீரமைக்க வேண்டும் என்று ஏற்கெனவே பலமுறை வலியுறுத்தினோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்தப் பூங்காவை உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை இந்த கூட்டத்தில் அளிக்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்து பேசிய மாநகராட்சி ஆணையா் கே.சிவகுமாா் கூறுகையில், பூங்கா இடிக்கப்பட்டது தொடா்பாக 2 முறை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவு தெரியவந்ததும், பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ஆனால், இதனை ஏற்க மறுத்த தங்கமுத்து, அதிகாரிகளை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தாா். இதைத் தொடா்ந்து அவருடன் அதிமுக உறுப்பினா்கள் ஜெகதீசன், தங்கவேல், நிா்மலாதேவி, ஹேமலதா, பாரதி உள்ளிட்டோா் கூட்டத்தில் இருந்து வெளியேறினா்.

ஒப்பந்தாரா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

இதுகுறித்து மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: நடராஜா திரையரங்கு பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் பொதுக்கழிப்பிடம் இருந்தது. கடந்த உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்புதான் கழிப்பிடம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ஓடைப்பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரா் அந்தப் பொதுக்கழிப்பிடத்தை இடித்து அகற்றிவிட்டாா்.

இது தொடா்பாக ஆணையாளரிடம் புகாா் அளித்துள்ளோம். அங்கு புதிய பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு எல்விஆா் காலனியில் குடிநீா், சாக்கடை, சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இதுதொடா்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல இடங்களில் பொதுக்கழிப்பிடம் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.

மாநகராட்சி சிறுவா் பூங்காக்கள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு பகுதியில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. அங்கு உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்றனா்.

மாநகராட்சி ஆணையா் கே.சிவகுமாா் பேசியதாவது: சித்தோடு பேரூராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீா் வசதி ஏற்படுத்தி கொடுக்க அமைச்சா் மற்றும் உயரதிகாரிகள் கூறியதின்பேரில், மாமன்றத்தில் தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தனியாா் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமாக பூங்காக்களை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கருவில்பாறைவலசு குளம் சீரமைக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT